திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை புரிந்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:
தமிழ்நாட்டு மாணவர்களை – படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றியாளராக்குவதற்கு “நான் முதல்வன்” திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், “CM Research Grant Scheme”, “CM Fellowship Program” ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” எனும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குள் நுழையும் 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்யும்பொருட்டு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்” அமைக்கப்பட்டிருக்கிறது.
எனது கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்‘ இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும், திட்டத்தின் மூலம் 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.