நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

மழை நிலவரம், பாதிப்புகள், அணை நீர் திறப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதித்த பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here