முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு 29.10.2024 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் சென்னையில் மட்டும் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. இந்த முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.

மேலும் முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here