மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மாவட்டங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்..
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து நின்றனர்.
புயல் மற்றும் கனமழைக்கு மத்திய அரசு சார்பில் தமிழ் நாட்டுக்கு எந்த வித நிவாரணமும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
வெள்ள பாதிப்புக்கு தமிழ் நாட்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,
தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாயும்,
டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாயும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டமாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் மத்திய அரசு நிவாரணத் தொகையை விடுவித்துள்ளது.
மக்கள் பாதிப்பில் இருக்கும் போது வழங்காத நிவாரணத்தினை தேர்தல் காலம் என்பதால் தருகிறார்களோ என்று அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.