தமிழ்நாட்டில் சமுகநீதி மலரக் கூடாது என்று முதலமைச்சர் விரும்புகிறாரா? அல்லது முதலமைச்சரை சுற்றியுள்ள சக்திகள் அவருக்கு தவறான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் அளித்து தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்களா? என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சமூகநீதியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற சமூக அநீதி எண்ணம் கொண்டவர்களால் மட்டும் தான் இப்படி அப்பட்டமாக பொய் கூற முடியும் என ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு என்றும், 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் கூறியிருப்பது அப்பட்டமான பொய்; சமூகநீதியை தடுக்க முதல்வரே பொய்யுரைக்கக் கூடாது.

இந்தியாவில் பீகார், கர்நாடகம், ஒரிஷா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்புகள் அனைத்துமே 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படிதான் நடத்தப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பீகார் அரசின் சார்பில் அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து வகையாக தரவு சேகரிப்புகளையும் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும், பீகார் உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டன. இந்த விவரங்கள் எதையும் அறியாமல் யாரோ கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று முதலமைச்சர் கூறியிருக்கக் கூடாது. அது தவறு. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இத்தகைய பொய்களை மீண்டும், மீண்டும் கூறக்கூடாது.

2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதை நீதிமன்றங்கள் ரத்து செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதும் தவறு ஆகும். பீகார் மாநில அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு செல்லும் என்று பீகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டது. அவ்வாறு இருக்கும் போது புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அது செல்லாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது இரண்டாவது பொய்.

இவை அனைத்துக்கும் மேலாக மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து மத்திய அரசு நடத்தினால் அது முழுமையானதாக இருக்காது. அதில் தலைகளின் எண்ணிக்கை மட்டும் தான் இருக்கும். பீகாரில் நடத்தப்பட்டது போன்று, மாநில அரசே நடத்தினால் தான் அதில் ஒவ்வொரு சமுதாய மக்களின் சமூக பின்தங்கிய நிலைமை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இதை உணர்ந்து 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here