சர்வதேச தங்க சந்தையின் முக்கிய அமைப்பான உலக தங்க கவுன்சில் (World Gold Council – WGC), அடுத்த ஆண்டில் Gold Price (தங்கம் விலை) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொடும் என்று ஒரு அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) டேவிட் டெயிட் சமீபத்தில் அளித்த நேர்காணலில், 2026 ஆம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,000 டாலர்களை எட்டும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை இந்திய மதிப்பில் கணக்கிட்டால், 10 கிராம் தங்கம் (24 கேரட்) சுமார் ரூ.1.92 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை உயரக்கூடும். இது தற்போதைய விலையை விட (சுமார் ரூ.1.35 லட்சம்) சுமார் 30% முதல் 50% வரை கூடுதலாகும்.
விலை உயர்வுக்குக் காரணமான 5 முக்கிய காரணிகள்
உலக தங்க கவுன்சில் இந்த அசுர வேக விலை உயர்வுக்குப் பின்வரும் காரணங்களை அடுக்கியுள்ளது:
- மத்திய வங்கிகளின் கொள்முதல்: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது அன்னியச் செலாவணி கையிருப்பைத் தங்கமாக மாற்றி அதிகளவில் சேமித்து வருகின்றன.
- சீனாவின் புதிய விதிகள்: சீனாவில் தங்கம் வாங்குவதற்கான விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள், அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளது.
- ஜப்பானின் பணவீக்கம்: ஜப்பானில் நிலவும் பொருளாதார மாற்றங்களால், அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
- நிதிநிலையற்ற சூழல்: உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள், பங்குச்சந்தையை விடத் தங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
- ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது, உள்நாட்டில் தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் காரணியாக உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் அதிர்ச்சி
ஏற்கனவே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி நடுத்தர மக்களின் சுப காரியங்களுக்குப் பெரும் தடையாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டே அது ரூ.1.60 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம் வரை உயரக்கூடும் என்ற தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்கப் பொருளாதாரம் எதிர்பாராத வேகத்தில் முன்னேறினாலோ அல்லது உலகளாவிய போர் பதற்றங்கள் தணிந்தாலோ மட்டுமே இந்த விலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தங்கத்தை ஒரு ஆபரணமாக மட்டும் பார்க்காமல், நீண்ட காலப் பாதுகாப்பான முதலீடாகக் கருதுபவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருந்தாலும், சாமானிய மக்களின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்குத் தங்கம் வாங்குவது இனி எட்டாக்கனியாகிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

