முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவிடம் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அதிமுக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் குறித்து பல்வேறு விஷயங்களை விமர்சனமாக முன் வைத்தார். அவரது பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசி, எம்ஜிஆரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகவும், பாரத் ரத்னா விருது பெற்றவரை, தவறான பொய்யான கருத்துகளால் சிறுமைப்படுத்தும் விதத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளதாக அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வெங்கடேசன் சார்பில் வழக்கறிஞர் ராஜசெல்வன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், “அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தனது செயலுக்கு திமுக எம்.பி ஆ.ராசா வருத்தமும், மன்னிப்பும் கேட்க வேண்டும், மேலும் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ்க்கு பதிலளிக்காத நிலையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது