பிரபல இயக்குனர் ஹரியுடன் விஷால் இணைந்திருக்கும் திரைப்படம் தான் “ரத்னம்”. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அப்பட ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரத்னம் படக்குழு பங்கேற்றனர்.
அப்போது விஷாலிடம், விஜய்யின் ஸ்டைலை பின் தொடர்கிறாரா? என்பது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக ஏற்கனவே விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததை போலவே, இந்த முறை நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்தது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ’’எனக்கு விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் செய்தார் என்பதற்காக நான் சைக்கிளில் சென்று வாக்களிக்கவில்லை, காரணம் என்னிடம் வேறு வாகனம் எதுவும் இல்லை. என் பெற்றோரின் தேவைக்காக ஒரு வாகனம் இருக்கிறது, மற்றபடி என்னிடம் இருந்த அனைத்து வாகனங்களையும் விற்று விட்டேன். மேலும் இப்பொழுது இங்கு இருக்கும் சாலைகளின் நிலையில் நான் புதிய கார்களை எடுத்து ஓட்டினால், அதற்கான சஸ்பென்ஷங்களுக்கு மட்டும் நான் தனியே மாதம் ஒரு தொகையை செலவழிக்க வேண்டியது இருக்கும்.
ஆகையால் நான் இப்பொழுது சைக்கிளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அண்மையில் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு இடம் பெயர்ந்த போது கூட வீட்டில் உள்ள பொருட்களை வண்டியில் அனுப்பிவிட்டு, நான் இளையராஜா பாடல்களையும், யுவன் பாடல்களையும் கேட்டுக் கொண்டு 83 கிலோ மீட்டர் சைக்கிளில் தான் சென்றேன்.
ஆகையால் நான் விஜய் செயலை பாலோ செய்து சைக்கிளில் செல்லவில்லை, என்னிடம் வேறு வாகனம் இல்லாத காரணத்தினால் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தேன். சில நேரங்களில் படப்பிடிப்புக்கு கூட நான் சைக்கிள்தான் சென்று வருகிறேன்” என்று பதில் கூறியுள்ளார்.