உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்குரலாய் ஒலித்த மாபெரும் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் திருவுருவச் சிலையினைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்து வைத்தார். எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா பொது நூலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ் அவர்களுக்குத் தலைநகர் சென்னையில் சிலை நிறுவப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இன்று காலை நடைபெற்ற விழாவில் மார்க்ஸின் சிலையைத் திறந்து வைத்த முதல்வர், அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சிந்தனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
“சிவந்தது சென்னை” – முதல்வரின் நெகிழ்ச்சி
சிலை திறப்பு நிகழ்விற்குப் பிறகு சமூக வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிவந்தது சென்னை! ‘இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை; அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது’ என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது!” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை விளக்கிய அவர், “நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிட மாடல்!” என்று குறிப்பிட்டுள்ளார். கன்னிமாரா நூலகம் அறிஞர்கள் கூடும் இடமாக இருப்பதால், அங்கேயே மார்க்ஸின் சிலை அமைக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
திராவிட இயக்கமும் பொதுவுடைமையும்
தமிழக அரசியலில் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் எப்போதும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. தந்தை பெரியார் மார்க்ஸின் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்க்க முன்னெடுத்தார். அந்த பாரம்பரியத்தைத் தொடரும் வகையில், திமுக அரசு தற்போது கார்ல் மார்க்ஸ் அவர்களுக்குச் சிலை அமைத்துக் கௌரவித்துள்ளது. தொழிலாளர் தினமான மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்ததும், மே தினப் பூங்கா அமைத்ததும் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை இந்த நிகழ்வின் மூலம் முதல்வர் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சென்னையில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை, இளைய தலைமுறையினருக்கு மார்க்ஸியப் பொருளாதாரச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் ஒரு அடையாளமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

