“சிலம்பாட்டம் ரீ ரிலீஸ், சிம்பு ரசிகர்களுக்கு திருவிழா அனுபவமாக இருக்கும்” – டி.ராஜேந்தர்

Priya
29 Views
3 Min Read

சிம்புவின் பிறந்தநாளைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான ‘சிலம்பாட்டம்’, பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ், தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

மறுவெளியீட்டை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இயக்குநர் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது, “என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.

அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் நன்றி.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற சிலம்பாட்டம், காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி–படத் தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

சிலம்பரசன் இந்தப் படத்தில் தமிழரசன் மற்றும் விச்சு என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.

இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. சிலம்பாட்டம் டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சனுஷா, ஸ்நேகா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு என அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, சிலம்பாட்டம் ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply