தமிழகத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்றும் நோக்கில், மாமல்லபுரத்தில் இன்று தொடங்கிய ‘உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026’ (Global Tourism Summit) நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். “பயணங்கள் என்பது புத்தகம் இல்லாத வகுப்பறைகள்” என்று தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
மெகா முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு: முதலமைச்சர் முன்னிலையில் மொத்தம் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க சில முதலீடுகள்:
- Heritage Theme Park: செங்கல்பட்டு மாவட்டத்தில் Mata Amritanandamayi Mandir Trust சார்பில் ரூ.3,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட தீம் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- Arenaone நிறுவனம்: ரூ.1,400 கோடி முதலீடு – 2,100 பேருக்கு வேலைவாய்ப்பு.
- Brihade Hotel Ventures: ரூ.1,100 கோடி முதலீடு – 900 பேருக்கு வேலைவாய்ப்பு.
உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம்: தமிழகத்தின் கலைகளான கரகாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து போன்றவற்றை உலக அரங்கிற்குச் சுற்றுலாத்துறை கொண்டு செல்லும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா திட்டங்களை அவர் பட்டியலிட்டார்:
- கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்கள்.
- கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் (மதுரை அலங்காநல்லூர்).
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அருகில் அமைக்கப்படும் கண்ணாடிப் பாலம்.
- ரூ.14 கோடியில் மேம்படுத்தப்படும் பிச்சாவரம் படகு இல்லம்.
- ஏற்காடு மற்றும் பிற மலைவாசத்தலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு.
பாதுகாப்பான தமிழ்நாடு: “இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட 12 வகையான முன்னுரிமை சுற்றுலாத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதற்காக ஒற்றைச் சாளர அனுமதி முறை (Single Window Clearance) அமல்படுத்தப்பட்டுள்ளது,” என முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். கடந்த காலங்களில் 128 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும், 45 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் தமிழகத்திற்கு வந்துள்ளதை அவர் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.
மாமல்லபுரத்தைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த ரூ.100 கோடியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்தார்.

