உலகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை (World Neglected Tropical Diseases Day) முன்னிட்டு, Strike Out Snakebite அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை, பாம்புக்கடி பாதிப்பை ஒரு சர்வதேச சுகாதாரப் பேரிடராகச் சித்தரித்துள்ளது. தடுக்கக்கூடிய ஒரு விபத்தாக இருந்தபோதிலும், போதிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்: இந்த ஆய்வின்படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 1.38 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு மரணம் நிகழ்கிறது. இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், உலகளாவிய உயிரிழப்புகளில் பாதிக்கும் மேலானவை (சுமார் 50%) இந்தியாவிலேயே நிகழ்கின்றன. இது இந்தியாவின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பில் உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.
சமூக சமத்துவமின்மை: பாம்புக்கடி பாதிப்பு என்பது வெறும் விபத்து மட்டுமல்ல, அது ஒரு சமூக சமத்துவமின்மையின் அடையாளம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. உயர்தரமான விஷ எதிர்ப்பு மருந்துகள் (Anti-Venom) மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் இன்றும் வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் ஒரு சலுகையாகவே உள்ளது. ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருந்துகள் தட்டுப்பாடு, அதிக விலை மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நீண்ட தூரம் ஆகியவையே மரணங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன.
தற்காப்பு நடவடிக்கைகள்: எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் 90% பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்:
- காலணிகள்: விவசாய நிலங்களிலும், புதர்கள் நிறைந்த இடங்களிலும் நடக்கும்போது உறுதியான காலணிகளை அணிய வேண்டும்.
- கொசு வலைகள்: தரைப்பகுதியில் உறங்குபவர்கள் நன்கு கட்டப்பட்ட கொசு வலைகளைப் பயன்படுத்துவது அவசியம்.
- ஒளி வசதி: இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது கண்டிப்பாக டார்ச் லைட் எடுத்துச் செல்ல வேண்டும்.
- முதலுதவி: பாம்பு கடித்தால் பதற்றமடையாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மந்திரம் அல்லது நாட்டு வைத்தியத்தை நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது.

