உலகெங்கிலும் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘தி லான்செட் பிளானட்டரி ஹெல்த்’ (The Lancet Planetary Health) இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு கட்டுரை அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தற்போதுள்ள நிலையே நீடித்தால், வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் Plastic உமிழ்வுகள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் தற்போதைய அளவை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (LSHTM) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், பிளாஸ்டிக்கின் முழு சுழற்சியும் மனித ஆரோக்கியத்திற்கு எத்தகைய கேடுகளை விளைவிக்கிறது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Plastic என்பது வெறும் குப்பையாக மட்டும் பூமிக்குச் சுமையாக இருப்பதில்லை; அதன் உற்பத்தி நிலையை எடுத்துக்கொண்டால், புதைபடிவ எரிபொருட்களைப் பிரித்தெடுப்பதில் தொடங்கி, தொழிற்சாலைகளில் பாலிமர்களாக மாற்றப்படுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. இந்த வாயுக்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும் காரணியாகவும் அமைகின்றன. 2016-ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் உமிழ்வுகளால் சுமார் 2.1 மில்லியன் ஆரோக்கியமான வாழ்க்கை ஆண்டுகள் (DALYs) இழக்கப்பட்ட நிலையில், 2040-இல் இது 4.5 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, Plastic பயன்பாட்டினால் மனிதர்களின் வாழ்நாள் சராசரி பாதியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இந்தத் தரவுகள் கூறுகின்றன.
குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிப்பது மற்றும் முறையாக அப்புறப்படுத்தாதது மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (Microplastics) எனப்படும் நுண் துகள்கள் நாம் சுவாசிக்கும் காற்று, குடிநீர் மற்றும் உணவுச் சங்கிலியில் கலந்துவிட்டன. இவை மனித உடலுக்குள் சென்று ஹார்மோன் சமநிலையின்மை, மலட்டுத்தன்மை, இதய நோய்கள் மற்றும் நரம்பியல் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. Plastic உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் (Phthalates) மற்றும் பிஸ்பெனால் ஏ (BPA) போன்ற ரசாயனங்கள் நேரடியாக ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2040-க்குள் பிளாஸ்டிக் உற்பத்தி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், உலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. வெறும் மறுசுழற்சி (Recycling) மட்டுமே இதற்குத் தீர்வாகாது; மாறாக, அவசியமற்ற Plastic தயாரிப்புகளை முற்றிலுமாகத் தடை செய்வதும், புதிய பிளாஸ்டிக் உற்பத்தியைக் கணிசமாகக் குறைப்பதும் மட்டுமே இந்தச் சுகாதாரப் பேரழிவைத் தடுக்கும் ஒரே வழி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பொருளாதார இழப்பு மற்றும் மருத்துவச் செலவுகள் வரும் காலங்களில் பல டிரில்லியன் டாலர்களைத் தாண்டும் என்பதால், இது ஒரு தனிநபர் பிரச்சனையாகப் பார்க்கப்படாமல் உலகளாவிய சுகாதார நெருக்கடியாகக் கருதப்பட வேண்டும்.

