சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘அனலி’. இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய சிந்தியா லூர்டே, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்குப் பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்தப் படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால், இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமா இருக்கும். 90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில், முதன்முறையாக முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். இயக்குநர் பி.வாசு சார் மகன் சக்தி வாசுதான் இந்தப் படத்தின் மெயின் வில்லன். இளங்கோ குமரவேல், இனியா, ஜெயசூர்யா, மேத்யூ வர்கீஸ், அசோக் பாண்டியன், ஜென்சன் திவாகர், வினோத் சாகர், பேபி ஷிமாலி, சிவா என பல பிரபலங்களும் இதில் நடித்துள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக பத்தாயிரம் கன்டெயினர்கள் கொண்ட யார்டில், மிகப்பிரமாண்டமான செட் அமைத்து, 30 நாட்கள் அந்த செட்டிலேயே படம்பிடித்தோம்.
இந்தப் படம் ஜனவரி 2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ், படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. அடுத்த வாரமே ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் ரிலீஸ் ஆனாலும், என்னுடைய படமும் நிச்சயம் பொங்கலுக்கு தியேட்டர்களில் ஓடும். தளபதி விஜய்யுடன் இணைந்து நடிப்பேன். என் தயாரிப்பில் அவர் நிச்சயம் நடிப்பார். அவர் சினிமாவை விட்டு போய்விட்டார் என்கிறார்கள். ஆனால், தேர்தல் முடிந்ததும் நவம்பரில் அவர் நடிக்க வருவார். எனக்கு ஜோதிடம் தெரியும்” என்றார்.


