இந்தியாவில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மிக அதிக அளவில் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை மேற்கத்திய அல்லது சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வந்தது. பிரதமர் மோடியின் இந்தியாவிலிருந்து சமூக ஊடகங்கள் உருவாக வேண்டும் என்ற அழைப்பை ஏற்று, கடந்த காலங்களில் ‘கூ’, ‘மித்ரோன்’ போன்ற சில முயற்சிகள் நடந்தாலும், அவை தேசிய அளவில் பெரிய அளவில் பிரபலமடையவில்லை. இந்தச் சூழலில்தான், சென்னையைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ (Zoho) உருவாக்கிய ‘அரட்டை’ (Arattai) என்ற செயலி, தற்போது வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்குப் போட்டியாகப் பிரபலமடைந்து, ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
அதிவேக வளர்ச்சிக்குக் காரணம் என்ன?
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற பன்னாட்டுச் சமூக ஊடகங்கள் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. இவற்றுக்கு மத்தியில், 2021-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ செயலி, ஆரம்பத்தில் தினசரி சுமார் 3,000 பதிவிறக்கங்கள் மட்டுமே பெற்று வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இதன் பதிவிறக்கங்கள் ஒரு நாளைக்கு 3 லட்சத்தைத் தாண்டி அதிவேகமாகப் பரவி வருவது தொழில்நுட்ப வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அசுர வளர்ச்சி, இந்தியர்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது. அத்துடன், தரவுப் பாதுகாப்பு (Data Security) குறித்த கவலைகளும், ‘அரட்டை’ போன்ற இந்தியச் செயலிகளின் பக்கம் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
பாதுகாப்புக்கு சோஹோவின் உறுதி
“உலகத்தின் தேவைக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலி அரட்டை” எனக் கூறும் சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, பயனாளர்களின் தரவுப் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளார். இந்தியப் பயனாளிகளின் தரவுகள் அனைத்தும் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள இந்திய டேட்டா சென்டர்களில் (Data Centers) மட்டுமே சேமிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது, வெளிநாட்டுச் செயலிகளில் தரவுகள் கையாள்வது குறித்த கவலைகளைப் போக்க உதவுகிறது.
மேலும், இந்தச் செயலியை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் நவம்பர் மாதத்தில் அப்பணிகள் நிறைவடையும் என்றும் ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சவால் நிறைந்த களம்
இந்தியாவில் சமூக ஊடகங்கள் கால் பதிப்பது என்பது இமாலய சவால்தான். தற்போது இந்தியாவில், வாட்ஸ்அப் சுமார் 50 கோடி, யூட்யூப் 48 கோடி, இன்ஸ்டாகிராம் 42 கோடி, ஃபேஸ்புக் 38 கோடி, மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) 3 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டு வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட நிறுவனங்களுடன் போட்டியிடுவது எளிதல்ல.
சீனா தனது நாட்டில் மேற்கத்திய சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்துவிட்டு, டிக்டாக், வி சாட் போன்ற தனது சொந்தச் செயலிகள் மூலம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேபோல, இந்தியாவிலிருந்தும் வலுவான ஒரு சமூக ஊடகம் உருவாக வேண்டிய தேவை உள்ளது.
‘அரட்டை’ செயலி அதிவேகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட்ஃபோன்களில் இடம்பிடித்தாலும், அது எந்த அளவுக்குப் பயனாளிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அதன் உண்மையான வெற்றியும், வாட்ஸ்அப்-க்கு எதிரான போட்டியும் அமையும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். ‘அரட்டை’ செயலியின் இந்த எழுச்சி, இந்தியாவில் சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உருவாகும் தொடக்கப் புள்ளியாக இருக்குமா என்பதே அடுத்த பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.