வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது மூன்றாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூரில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
நாமக்கல், கரூரில் அனல் பறக்கும் பிரச்சாரம்
மூன்றாம் கட்டப் பிரச்சாரத்துக்காக, நடிகர் விஜய் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் பயணிக்க உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டத்துக்குச் செல்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே சேலம் சாலை பகுதியில் காலை 8.45 மணியளவில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த பிறகு, கரூர் மாவட்டத்துக்குச் செல்லும் விஜய், அங்குள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் நண்பகல் 12 மணிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். இந்தப் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, இன்று இரவு 10 மணிக்கு சென்னைக்குத் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திட்டமிட்ட நேரத்தில் பிரச்சாரம்
முன்னர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், இந்த முறை திட்டமிட்ட நேரத்தில் பிரச்சார நிகழ்ச்சிகளை முடிக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் செய்தி அச்சிடப்படும் நேரம் வரை தவெக தலைவர் விஜய் நாமக்கல்லுக்கான பயணத்தை இன்னும் தொடங்கவில்லை.
தவெகவின் தீவிர ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை நிபந்தனைகள்
தவெக தலைவர் விஜய்யின் வருகையையொட்டி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தவெக-வினர் பிரச்சார ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், காவல்துறை தரப்பில் இந்தக் கூட்டங்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் இந்தப் பிரச்சாரம் நாமக்கல் மற்றும் கரூரில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.