தஞ்சை – நாகை நெடுஞ்சாலை மேம்படுத்தப்படவில்லை, நெல் குடோன்கள் கட்டப்படவில்லை என தமிழக முதல்வர் பெருமை பேசுவதாக மக்கள் மத்தியில் விமர்சனம் செய்து, நேர்மையாகவும் துணிச்சலாகவும் தேர்தலை எதிர்கொள்ள வருமாறு ஆளும் கட்சியைப் பார்த்து அறைகூவல் விடுத்திருக்கிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய். தனது திருச்சி மற்றும் அரியலூர் பயணங்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இது போன்ற அடக்குமுறைகள் தொடர்ந்தால், நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
பெரம்பலூரில் மன்னிப்பு கோரிய விஜய்
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், தனது முதல் அரசியல் பயணத்தை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மேற்கொண்டார். திட்டமிடப்பட்டபடி, சரியாக 7 மணிக்கு பெரம்பலூரில் பேச முடியாமல் போனதற்கு, பெரம்பலூர் மக்களிடம் அவர் மன்னிப்புக் கோரினார். தனது பயணத்தை தாமதமின்றித் தொடங்கினாலும், வழிநெடுக ரசிகர்கள், தொண்டர்கள் திரண்டதால், பிரசார வேன் மெதுவாகவே செல்ல முடிந்தது. திட்டமிட்ட பயண நேரம் மாறுபட்டாலும், இரவு தாமதமாக வந்தடைந்து ரசிகர்களைச் சந்தித்துச் சென்றார். மக்களுக்காக திட்டமிட்ட சனிக்கிழமை பயணம் குறித்து விமர்சனம் எழுந்தது, ஆனால் மக்களைச் சந்திக்கும்போது, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவிதத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், வார இறுதி நாளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
முதல்வர் பெருமை பேசுவது எதற்காக?
“பார்த்துக்கலாம் சார் கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து தமிழகத்தை கொள்ளையடிக்கும் நீங்களா? அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குள் ஒருத்தனாக இருக்கும் இந்த விஜய்யா?” என தன் பேச்சின் தொடக்கத்திலேயே ஆளும் தி.மு.க. அரசுக்கு நேரடியாக சவால் விடுத்தார் விஜய். திருச்சி, அரியலூர் பயணத்தில், மேலக்கோட்டை மேம்பாலம் 50 ஆண்டுகளைக் கடந்தும் சீரமைக்கப்படவில்லை, தஞ்சாவூர் – நாகை நெடுஞ்சாலைப் பணி பல ஆண்டுகளாக மந்தமாகவே நடைபெறுகிறது, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, நிரந்தர நெல் குடோன்கள் கட்டப்படவில்லை என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதோடு, நிறைவேற்றாத திட்டங்களை நிறைவேற்றியதாக முதல்வர் பெருமை பேசுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.
“அரசு காமெடியாக இருக்கிறது”
திருச்சி மற்றும் அரியலூரில் தன்னுடைய அரசியல் பயணத்திற்கு ஏற்பட்ட தடைகளை விஜய் ஆவேசத்துடன் விமர்சித்தார். அரியலூர் செல்வதற்கு முன்பாக மின் தடை, திருச்சியில் பேச முற்படும்போது ஒலிபெருக்கி வயர் துண்டிக்கப்பட்டது போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, “இந்த அரசை நானும் ஏதோ என்று நினைத்தேன், ஆனால் காமெடியாக இருக்கிறது” எனக் கிண்டல் செய்தார். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ வரும்போது இது போன்ற மின்தடை, வயர் துண்டிப்பு போன்ற தடைகள் ஏற்படுமா? என அனல் பறக்கும் கேள்வியை முன்வைத்தார். “மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே” என்று மத்திய – மாநில அரசுகளின் உறவைச் சாடினார்.
என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?
விஜய் தனது பேச்சில், “என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா? அதற்கு நான் ஆள் இல்லை” என்று ஆவேசமாகப் பேசினார். கொள்கை பெயரளவில் வைத்து குடும்ப ஆட்சி நடத்தும் அவர்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்த உழைப்பால் வளர்ந்த தனக்கு எவ்வளவு இருக்கும் எனவும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். தங்கள் பயணம் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அனுமதி கோரியதாகவும், ஆனால் மக்கள் நெருக்கடியாக நிற்கும் இடத்தை அரசு தேர்ந்தெடுத்துக் கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் தன்னைச் சந்திக்கக்கூடாது, தன் பேச்சைக் கேட்கக் கூடாது, தன்னுடைய குறைகளைச் சொல்லக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணமா? என நேரடியாகக் கேட்டார்.
2026-ல் இரு கட்சிகளுக்குத்தான் போட்டி
அனைத்துத் தடைகளையும் தாண்டி, மக்களின் பேராதரவோடு தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக விஜய் நம்பிக்கை தெரிவித்தார். “நாம் இங்கு தனியாள் கிடையாது, மாபெரும் மக்கள் சக்தி உடைய பிரதிநிதி, பெண்கள் சக்தி உடைய சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கம்” என்று தனது வலிமையைக் குறித்து அழுத்தமாகப் பதிவு செய்தார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வும், தி.மு.க.வும் மட்டுமே போட்டியில் இருக்கும் என்று ஆணித்தரமாகச் சொன்னார். “இந்த பூச்சாண்டி வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, தில்லா, கெத்தா, நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க” என ஆளும் அரசுக்கு சவால் விடுத்தார். இந்த அடக்குமுறை தொடர்ந்தால், நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்பேன் என்றும், “இந்த திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா? உங்க தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைய வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பி, தொண்டர்களிடம் இருந்து பலத்த ஆதரவைப் பெற்றார். “இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது, துரத்திக்கொண்டே வரும்” என்று ஆளும்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்து, தனது முதல் அரசியல் பயணத்தை நிறைவு செய்தார்.