நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையிலும் இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலையின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும் ஆண்டுதோறும் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரம்மாண்ட கலை விழாக்கள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படுவது வழக்கம் .

இந்நிலையில் நடப்பாண்டிற்கான சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.13 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன.17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

2023-2024-ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளவார்கள். இவ்விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்திட தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும் எனவும், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here