தஞ்சாவூர்: கல்விக்கு மதிப்பளித்து, சொந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், சிங்கப்பூரில் வசிக்கும் தொழிலதிபர் பொன்.கோவிந்தராஜ், ரூ.2 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை இலவசமாக தானமாக வழங்கியுள்ளார். அவரது இந்த செயல், கிராம மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கல்வியின் அவசியத்தை உணர்ந்த தொழிலதிபர்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அமைந்துள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருமங்கலக்கோட்டை கீழையூர், மேலையூர், அருமுளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ‘திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை’ ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளை அறிந்த, திருமங்கலக்கோட்டை கீழையூரை பூர்வீகமாகக் கொண்ட பொன்.கோவிந்தராஜ், தற்போது சிங்கப்பூரில் தொழிலதிபரக வசித்து வருகிறார். பள்ளியின் இடம் போதாமல் இருக்கும் நிலையை அறிந்த அவர், அதை சரிசெய்யும் விதமாக தனது சொந்த நிலத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை இலவசமாக தானமாக வழங்க முன்வந்தார்.
சுதந்திர தின விழாவில் ஆவணங்கள் ஒப்படைப்பு
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பொன்.கோவிந்தராஜ் தானமாக வழங்கிய நிலத்திற்கான ஆவணங்களை, திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். இந்த நிகழ்வில், கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அவரைப் பாராட்டினர்.
இந்த விழாவில் பேசிய கோவிந்தராஜ், “மாணவர்களாகிய உங்களை உயர்த்தும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து, பெற்றோருக்கும், நமது கிராமத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கிராம மக்களின் பாராட்டு
பொன்.கோவிந்தராஜின் இந்த செயல் குறித்து, திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள், “எங்கள் அறக்கட்டளை மூலம் ஏற்கெனவே பள்ளிக்கு ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது, கோவிந்தராஜ் அவர்கள் இவ்வளவு பெரிய நிலத்தை தானமாக வழங்கியிருப்பது, கல்வி மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது. அவரது இந்த பெருந்தன்மையான செயல், கிராமத்தினருக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது” என்று தெரிவித்தனர். ஒரு தொழிலதிபர் தனது சொந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக, குறிப்பாக கல்வி வளர்ச்சிக்காகத் தாராள மனதுடன் உதவியிருப்பது, மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.