நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பேசுகையில், “தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது” என்றார்.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதோடு ‘அநாகரீகமானவர்கள்’ என்ற வார்த்தையை தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம்ஸ்ரீ திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here