நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் 38,956 பேருக்கு ரூ.200.27 கோடி மதிப்பு நலத்திட்டங்களை வழங்கினார். ரூ.139 கோடி மதிப்பிலான கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. வேதாரண்யம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பணி நடைபெறுகிறது. நாகையில் 13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ரூ.250 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
நாகையில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 31,953 பேருக்கு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளிக்கிறேன். அவை,
* நாகை மாவட்டத்தில் தெற்குபொய்கைநல்லூர், கோடியக்கரையில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.
* விழுந்தமாவடி, வானாமாமகாதேவி பகுதியில் ரூ.12 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்.
* சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.
* வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியில் ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
* வடிகால் மற்றும் வாய்க்கால். மதகுகள் ரூ.32 கோடி செலவில் மறு சீரமைப்பு செய்யப்படும்.
* 150 ஆண்டுகால பழமை வாய்ந்த நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 3656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கச்சத்தீவு தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் விதத்தில் இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் தேவை.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. 2010க்கு பிறகு இலங்கை – இந்தியா இடையிலான மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகம் முன்னேறி இருப்பதற்கு காரணம் இருமொழி கொள்கைதான் என மத்திய அரசுக்கு தெரியும். தமிழகத்திற்கான நிதி முறையாக வருவதில்லை. மாணவர்களுக்கான கல்வி நிதியை கூட வழங்க மறுக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இருமொழிக் கொள்கையே காரணம்.இந்தியை திணித்து, சிலரின் சமூக ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சி நடக்கிறது. போராடி பெற்ற உரிமைகளை எப்படி பறிக்கலாம் என மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.