பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ‘ஒன்றிய அரசு கொடுக்கும் நிதிச்சுமையையும் சமாளித்து மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழக அரசின் வருவாய் உயர்ந்தாலும் கடன் சுமையும் உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியுள்ளார். தமிழக அரசின் வெட்டி செலவுகள் என குறிப்பிட்டார். வரம்புக்கு உட்பட்டுதான் நிதியமைச்சர் ஏற்கெனவே விளக்கி விட்டார். எப்போதும் இல்லாத அளவு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் செலவு எல்லாம் வெட்டி செலவா?
மீண்டும் மீண்டும் டங்ஸ்டன் திட்டம் விவகாரத்தில் மதுரை மக்களை குழப்ப பர்க்கிறார்கள். கனிம வளங்கள் விஷயத்தில் மாநில உரிமையை ஒன்றிய அரசு பறிக்கும் சட்டத்தை ஆதரித்துடங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு வழிவகுத்து துரோகம் செய்தது அதிமுகதான். ஆனால் நாங்கள் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம்’ என கூறிக்கொண்டிருக்கும்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து துரோகம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ஆதரித்தார்கள் என்று சொல்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
‘சட்டமன்றத்தில் ஏற்கெனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். டங்ஸ்டன் திட்டம் வராது. வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என தெளிவாக கூறியிருக்கிறேன். இதையும் மீறி மக்களை குழப்பி அதில் குளிர் காய வேண்டாம் என குளிர் காய்பவர்களுக்கு மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உடனே எழுந்து அந்த வார்த்தை ஏன் என கேட்காதீர்கள்’ எனத் தெரிவித்தார்.