திருப்பதி திருமலையில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் திரண்டதில், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். பிரதான நுழைவு வாயிலை திடீரென்று திறந்து விட்டதால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு உள்ளே சென்றதே இந்த கோரச் சம்பவத்துக்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில். உலகம் முழுவதும் இருக்கும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில் திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 ஆம் தேதி சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு மொத்தம் 1.20 லட்சம் இலவச தரிசன டோக்கன் இன்று காலை 5 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகம், ஸ்ரீநிவாச வளாகம் உள்ளிட்ட எட்டு இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்காக நேற்றே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பைராகி பட்டேடா பகுதியில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களை வரிசையில் செல்ல போலீசார் அனுமதித்த போது, ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். இதனால் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் பலர் கீழே விழுந்தனர்.
அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணும் பலியானார். மேலும் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதற் கட்ட விசாரணையில், பிரதான நுழைவு வாயிலை திடீரென்று திறந்து விட்டதால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு உள்ளே சென்றதே விபத்துக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் தெரிவித்துள்ளார்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்து உள்ளார்.
சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது