2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.247 கோடி வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75/- விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247.00 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.