சென்னையில் மேயர் பிரியா இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

“சென்னையைப் பொருத்தவரை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. 20 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. நேற்று இரவு முழுவதும் அனைத்து பணியாளர்களுமே களத்தில் இருந்தனர். இதனால் பல இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பிரதான சாலைகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதைக் காண முடிகிறது.

 

சென்னை புளியந்தோப்பு பகுதியைப் பொருத்தவரை, அது ஒரு தாழ்வான பகுதி. எனவே, அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் மாற்று இடங்களில் தங்கினர். ஒருசிலர் தங்களது குடியிருப்புகளிலேயே இருப்பதாக தகவல் தெரிவித்தனர். நேற்று அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. நேற்றிரவு மழை நின்றபிறகு, அந்தப்பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அப்பகுதியில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும்.

 

அரசின் மழைநீர் வடிகால் பணிகால் பணிகள், சிறப்பான முறையில் மழைநீரை அகற்றும் பணிகளில் கைகொடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்தால், ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். அதன்பிறகுதான், அந்த தண்ணீர் வெளியேற்றப்படும். ஆனால், இன்று ஒரே இரவில் மழைநீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்றால், அதற்கு தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம்.” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here