பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 16 அரசு ஊழியர்களைச் சேர்க்காத விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு கல்வித்துறை இயக்குநர் ஆகஸ்ட் 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், ஊழியர்களைப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்காததால் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டவர்கள் பின்னர் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பாயம், அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அளித்த உத்தரவில், மனுதாரர்களின் பணி 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் கணக்கிடப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.
ஓய்வூதியத் திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஷேக் அப்துல் காதர், எல். அழகேசன், பி. ஷர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேருக்கு வணிக வரித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்களது பணி 2004ஆம் ஆண்டு முதல் வரையறை செய்யப்பட்டு, 2010ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டுக்கு பின்னரே பணி வரையறை செய்யப்பட்டதால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மாறாக, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இதை எதிர்த்து ஷர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “எங்களுக்குப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, எங்களது பணி 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் கணக்கிடப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை தாமதமாக நிறைவேற்றி, எங்களது பெயரைப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தனர்.
உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா, “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரர்களை 1996ஆம் ஆண்டு முதல் பணி வரையறை செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும்,” என்று கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை.
More Read
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் ஆஜராக உத்தரவு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அரசு செயல்படுத்தாததால், மனுதாரர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். இந்தப் புகார், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி, நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகத் துறை முதன்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி, வணிக வரித்துறை ஆணையர் ஜெகந்நாதன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் கிருஷ்ணன் உன்னி ஆகிய 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி. பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி பட்டு தேவானந்த், சம்பந்தப்பட்ட 6 அதிகாரிகளும் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சில ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.