சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் என்கிற ஏ. சங்கர் (48) மீது நிலுவையில் உள்ள மற்றும் புலன் விசாரணை முடிவடைந்த கிரிமினல் வழக்குகளின் பட்டியலை ஜூலை 29-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி, கிரிமினல் வழக்குகளில் சிலர் பரபரப்புக்காக இணைய ஊடகங்களில் தனி விசாரணைகளை நடத்துவதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போதே, ஊடகங்களில் விவாதங்களையும் நடத்தி வருவதாகவும் கண்டிப்புடன் தெரிவித்தார். வழக்குகளின் முடிவுகளைப் பார்க்காமல், காவல்துறைக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு வழக்கைக் எவ்வாறு கையாள வேண்டும் என்று கட்டளையிடும் அளவுக்குச் செல்கிறார்கள் என்றும், தங்களுக்கு அறிவுரைகளைக்கூட வழங்குகிறார்கள் என்றும் நீதிபதி விமர்சித்தார்.
பேச்சுரிமைக்கான எச்சரிக்கை
பத்திரிகையாளர்கள் அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் ஆரம்பகட்ட விசாரணை/விசாரணையிலேயே சேற்றை வாரி இறைக்கக் கூடாது என்றும் நீதிபதி எச்சரித்தார். “சட்டத்தின் 19வது பிரிவு என்பது ஒரு ஆயுதம். பொதுவாக நல்ல காரணத்திற்காக அந்த 19வது பிரிவு ஆயுதத்தை எடுக்க வேண்டும், ஆனால் மிரட்டுவதற்காக அல்ல. சில பத்திரிகையாளர்கள் மக்களை மிரட்டுகிறார்கள். இது ஒரு கசப்பான உண்மை. போலீசாரும், நீதிமன்றங்களும் உங்கள் கட்டளைப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இது சரியில்லை. இதையெல்லாம் செய்து மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்,” என்றும் நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுகள்
சங்கர் தனது மனுவில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அருண் தனக்கும் தனது ஊழியர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். போலீஸ் அட்டூழியங்கள், முறைகேடுகள் மற்றும் பல விவகாரங்களில் கமிஷ்னர் அருண் நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது யூடியூப் சேனல் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பல்வேறு “சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு” உட்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனது குழுவினருடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகருக்குச் சாலை மார்க்கமாகச் சென்றபோது, தெலுங்கானா காவல்துறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் அவர்களை வழிமறித்து ராமையம்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் சங்கர் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி ஓட்டுநர் மற்றும் ஒளிப்பதிவாளர் உட்பட அனைத்து குழுவினரும் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாததால் ₹1,000 செலுத்திய பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் சென்னை காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்குத் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
புகார் மற்றும் கோரிக்கைகள்
சென்னை காவல்துறையினர் தனது நடமாட்டத்தைக் கண்காணித்து துன்புறுத்துவது குறித்து உள்துறைச் செயலாளருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாகவும் மனுதாரர் கூறினார். மேலும் மே மாதம் தனது ஒளிப்பதிவாளர் மற்றும் காட்சி எடிட்டருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்கள் சிறிய குற்றங்களுக்காக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மே 23-ஆம் தேதி உள்துறைச் செயலாளருக்கு இரண்டாவது புகார் அனுப்பினார். ஏனெனில் அவர் தமிழ்நாடு காவல்துறை (சீர்திருத்தங்கள்) சட்டம், 2013-ன் கீழ் அமைக்கப்பட்ட மாநில காவல்துறை புகார்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். எனவே காவல்துறையினரின் அத்துமீறல் புகார்களை விசாரிப்பதற்குரிய சரியான அதிகாரி அவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஜூன் 21-ஆம் தேதி டிஜிபிக்கும் இதேபோன்ற புகார் அளித்ததாகக் கூறிய சவுக்கு சங்கர், தனது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சவுக்கு மீடியா செயல்படுவதில் தலையிடுவதைத் தடுக்கவும் உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இருப்பினும், உள்துறைச் செயலாளரின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், சவுக்கு சங்கர் அளித்த புகார்கள் 2013 சட்டத்தின் வரம்பிற்குள் கண்டிப்பாக வராது என்று வாதிட்டார். மேலும் இரண்டு வாரங்களுக்குள் பதில் பிரமாணப் பத்திரம் மூலம் தனது அனைத்து சமர்ப்பிப்புகளையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதுள்ள குற்றவியல் வழக்குகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது