கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் பலி எண்ணிக்கை 30ஐ தாண்டியது. இதனிடையே, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன், அமைச்சர் ஏ.வ. வேலு ஆகியோர் சந்தித்தனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், “கள்ளக்குறிச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட காவல் துறை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அமைச்சர் எ.வ வேலு, “பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தோம். இவர்கள் அருந்திய விஷச சாராயத்தில் மெத்தனால் கலந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்றார்.
மேலும், பாக்கெட் சாராயத்தில் மெத்தனால் கலந்து இருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கள்ளச்சாராயத்தை விற்றதாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது சகோதரர் தாமோதரனையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்திய 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி கோமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.