சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

Priya
17 Views
1 Min Read

மணலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் திறந்து வைத்தார்.

தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் `தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்’ கீழ், வடசென்னை பகுதி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், வட்டார அளவிலான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் மணலியில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எல். விஜய்பிரபு ஆகியோர் நேற்று திறந்து வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு தேவைக்கும் வெவ்வேறு இடங்களுக்கு அலைவதை தவிர்த்து, அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெறும் வகையில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்பு கல்வி, அறிவாற்றல் மேம்பாடு, பேச்சு மற்றும் தகவல் தொடர்பு திறன் பயிற்சி, வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்து, அவர்களின் உடல் இயக்கம், கற்றல் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க இங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான வழிகாட்டுதல், யுடிஐடி அடையாள அட்டை, அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்ப வழிகாட்டுதல் குறித்த சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

இத்துடன் வீட்டை விட்டு வெளியே வரஇயலாத மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரில் வழங்குவதற்கான நடவடிக்கையும் இங்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிகழ்வில் டோர்கஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஐஸ்வர்யா, வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பூ.சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply