சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (நவ. 16) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,00,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ரூ.12,540 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (நவ. 14), சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,920-க்கும், ஒரு கிராம் ரூ.12,615-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 11-ஆம் தேதி ரூ.1,04,120 ஆகவும், நவம்பர் 12-ஆம் தேதி ரூ.1,02,520 ஆகவும் படிப்படியாகக் குறைந்தது.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று ரூ.1,00,920 ஆக இருந்த தங்கம் விலை, இன்று மேலும் ரூ.600 குறைந்து ரூ.1,00,320 என்ற விலையை எட்டியுள்ளது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களுக்கு வட்டி அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் தங்கத்தை விற்பனை செய்வது, சர்வதேச பதற்றம் தணிவதால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட காரணிகளால் ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக சரிந்து வருகிறது.

