இந்திய சினிமா வரலாற்றில் பெண்களை மையமாகக் கொண்ட படைப்புகள் அவ்வப்போது வெளிவந்திருந்தாலும், ‘லிட்டில் உமன்’, ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ அல்லது ‘கங்குபாய் காதியாவாடி’ உள்ளிட்ட வரிசையில் பெண்களே முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு படைப்பு திரைக்கு வந்து நீண்ட காலமாகிறது. அந்த நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தர்மராஜ் ஷெட்டி இயக்கி எழுதியுள்ள புதிய கிரைம் த்ரில்லர் தொடர்தான் ‘அக்கா’.
1980-களின் காலகட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்த ஒரு கற்பனை நகரத்தின் நீண்டகாலப் பாரம்பரியத்தைப் பெண்களே முன்னின்று காக்கும் ஓர் உலகத்தை பின்னணியாக கொண்டு இத்தொடர் நகர்கிறது. இங்கு ஆண்களின் அதிகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, தலைமுறைகளைக் கடந்து கம்பீரமாக ஆட்சி செலுத்தும் பெண்களின் குலமே கோலோச்சுகிறது.
பல நூற்றாண்டுகளாகத் தொடரும் தாய்வழிச் சமூகத்தின் அதிகாரத்தை, திடீரென வந்து இறங்கும் ருத்ரா என்ற பெண் (ராதிகா ஆப்தே) சிதைக்க முற்படுகிறார். அவரது வருகை, குலத்தின் தலைவியான பவானிக்கும் (கீர்த்தி சுரேஷ்), அங்குள்ள மற்ற பெண்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது. இவர்களுக்கு இடையேயான அதிகாரப் போட்டியும் மோதல்களுமே இக்கதையின் மையக்களம்.
‘அக்கா’ தொடர் நம்மை ஈர்ப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, கலை இயக்குநர் லக்ஷ்மி கேலுஸ்கரின் உழைப்பு திரையில் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. 1980-களின் இயற்கையோடு இயைந்த சூழல், பாரம்பரிய வீடுகள் மற்றும் கலாச்சார நுணுக்கங்களை அவர் கண்முன் நிறுத்தியுள்ள விதம் வியக்க வைக்கிறது.
‘கங்குபாய் காதியாவாடி’ புகழ் ஷீத்தல் சர்மாவின் ஆடை வடிவமைப்பும் கூட கதையின் பின்னணியை மிக அழகுடன் தாங்கிப்பிடிக்கிறது. எந்தவொரு இடத்திலும் திணிப்பு இல்லாமல், அசலான கதை சொல்லலின் மூலம் இத்தொடர் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லாம்.
கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்துள்ள பவானி, தனது குடும்பத்தின் 800 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க போராடும் கதாபாத்திரம். ஆனால், அவரது ஒட்டுமொத்த உலகமும் திடீரென நுழைந்த ருத்ராவின் வருகையால் தலைகீழாக மாறுகிறது. கடமைக்கும் உணர்வுகளுக்கும் இடையே சிக்கும் பவானி எடுக்கும் கடினமான முடிவுகள் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. போகப் போக கதை நாம் எதிர்பாராத திசையில் பயணிக்க தொடங்குகிறது.
ராதிகா ஆப்தே – கீர்த்தி சுரேஷ் இருவரும் இத்தொடரின் பலம் என்பதை உணர்ந்து இருவருமே மிகச் சிறந்த நடிப்பை தந்துள்ளனர். பெண்களே துப்பாக்கிகளுடன் களமிறங்கி செய்யும் ஸ்டைலான ஆக்ஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்து. குறிப்பாக, கடைசி இரண்டு எபிசோடுகள் பார்வையாளர்களை முழுமையாக கவர்ந்துவிடுகின்றன.
ஜவ்வாக இழுக்காமல் வெறும் 5 எபிசோடுகளிலேயே சீசனை முடித்திருப்பது நல்ல உத்தி. பெண்களின் உரிமைகள் குறித்தும், ஆண்களின் ஆதிக்கம் இல்லாத ஓர் உலகம் குறித்தும் படம் எங்குமே வலிந்து திணிக்கப்பட்ட போதனையைக் கையாளவில்லை.
தொடரின் பெரிய குறையென்று பார்த்தால், பலதரப்பட்ட பெயர்களையும், போரில் ஈடுபடும் பல்வேறு பிராந்தியங்களின் பெயர்களையும் புரிந்துகொள்வதற்கே பாதி மூளை கழன்றுவிடுகிறது. இந்த சிக்கலான கதையில் யார் யார் எங்கு வருகிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளவே பெரும் பொறுமை தேவைப்படுகிறது.
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பாணியிலான ஒரு கதையில் கதாபாத்திரங்கள் ஆடியன்ஸுக்கு எந்தவித குழப்பங்களும் இல்லாமல் பதியவைக்கப்படுவது முக்கியம்.
அதேபோல தொடரின் மையக் கருவான சில சுவாரஸ்யமான ஐடியாக்களை செயல்படுத்துவதில் ஒருவித தொய்வு தென்படுகிறது.
தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்காக வாரிசுகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், திருமண முறையை முற்றிலுமாகப் பெண்கள் நிராகரிப்பது தர்க்கரீதியாக சரியாகப் பொருந்தாமல் உறுத்துகிறது. அதேபோல, மும்பையின் நிழல் உலகக் கும்பலுக்கும் ருத்ராவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்த பின்னணி கதையும் போதுமான அளவுக்கு ஆழமாக விவரிக்கப்படவில்லை.
ஆண்களும் இக்கதையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முடிவுகளை எடுப்பவர்களாக இல்லை. அன்ஷுமன் புஷ்கர் மற்றும் மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, சீசனின் இறுதியில் மகேஷ் மஞ்சரேக்கர் தொடர்பான காட்சிகள், இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பை எழுப்பியபடியே முடிகிறது.
சில தொய்வுகள் இருந்தாலும் ‘அக்கா’ நேர்த்தியான முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தர்க்கரீதியான குறைகளை தாண்டி, இத்தொடர் பெண்களை மையமாக கொண்ட ஒரு தவிர்க்க முடியாத படைப்பாக நிற்கிறது. நெட்ஃப்ளிக்ஸில் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. கண்டிப்பாக 18 வயதை கடந்தவர்களுக்கானது.

