“அரசியலை கவனிக்கிறேன்… வரும் காலத்தில்…” – அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் சூர்யா ஓபன் டாக்!

Priya
889 Views
2 Min Read

தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருவதாக நடிகர் சூர்யா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அரசியலுக்கு வருகிறாரா சூர்யா…? அவர் அளித்த பேட்டி குறித்து விரிவாக பார்ப்போம்.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘சீன்’ படத்தில் நடிகர் சூர்யா ‘அரசியலுக்கு போறேன்’ என பேசிய வசனம் கவனம் பெற்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சூர்யா, திரைத்துறை தாண்டி ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார். மறுபுறம், சூர்யாவின் ரசிகர் மன்றங்கள் சத்தமே இல்லாமல் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகின்றன.

வழக்கமாக அரசியல் கட்சித் தொடங்கும் நடிகர்களின் புதிய கட்சிக்கான அடித்தளம் என்பது பெரும்பாலும் இத்தகைய ரசிகர் மன்றங்களாகவே இருந்துள்ளன. இதனால், நடிகர் சூர்யாவும் வருங்காலத்தில் அரசியலில் என்ட்ரி கொடுப்பாரா..? என்ற பேச்சு கோலிவுட் தாண்டி, அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் சென்னையில் நடந்த அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் அரசியல் தளத்திலும் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், அரசியல் குறித்த தனது பார்வையையும், எதிர்கால நகர்வுகள் குறித்தும் நடிகர் சூர்யா மனம் திறந்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த சூர்யா, கல்விதான் எல்லாவற்றையும் மாற்றும் எனவும், வெறுமனே மாற்றம் மாற்றம் என்று சொல்வது பிரயோஜனம் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஊழல் உள்ளிட்ட அனைத்து சமூக பிரச்சனைக்கும் மூல காரணம் அறியாமைதான் எனக் குறிப்பிட்ட சூர்யா, கல்வி என்கிற வெளிச்சம் மட்டுமே அறியாமை எனும் இருளை போக்கும் என சுட்டிக்காட்டினார். ஊழலை மூன்றாவது நபர் வந்து ஒழிக்கப்போவதில்லை எனவும், ஒவ்வொரு தனிநபரும் தங்களுக்குள் அந்தப் போராட்டத்தை நிகழ்த்தி பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, தாங்கள் செய்துக் கொண்டிருக்கும் வேலையை சேவை என்று சொல்ல மாட்டேன் எனக் கூறிய சூர்யா, அது தங்களின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார். இதற்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனத் திட்டவட்டமாக விளக்கம் அளித்த அவர், வழி தெரியாமல் கூட அரசியல் பக்கம் போய்விட மாட்டேன் என்றார்.

அரசியலுக்கு போக மாட்டேன் என்பதால் அதனை வெறுப்பதாக அர்த்தம் இல்லை எனவும், மவுனமாக, அரசியலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மனதிற்குப் பிடித்து முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு அரசியலில் ஈடுபட முடியும் என்றால் யார் வேண்டுமென்றாலும் இதில் ஈடுபடலாம் எனக் குறிப்பிட்ட சூர்யா, அரசியலை முழுமையாக தெரிந்துகொண்டு, அதன் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply