‘ஓம்’ ரிலீஸை தள்ளி வைத்த தனுஷுக்கு நன்றி சொன்ன சூர்யா

Priya
846 Views
2 Min Read

தனது ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த முடிவுக்காக தனுஷுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சீன்’. ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது.

அதில் பேசிய சூர்யா, “இது ஒரு முக்கியமான மேடை. ஒரு படத்தின் ஆடியோ லாஞ்ச். என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். அவருக்கு என் பிரார்த்தனைகள். நான் என்றும் உங்களை நினைவில் வைத்திருப்பேன் தேவா சார்.

நீங்கள் தொடங்கி வைத்த இந்தப் பயணத்துக்கு நன்றி. ‘அவள் வருவாளா…’ என நீங்கள் போட்ட பாடல் தான் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நான் இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கான ஆரம்ப புள்ளி நீங்கள் போட்டதுதான்.

இந்த மேடையை மீண்டும் அழகாக்கியது ரசிகர்களாகிய நீங்கள்தான். நற்பணி மன்றம் என்பது எப்படி இருக்க வேண்டும், நாம் யார் என்பதை அடுத்தவர்களுக்கு ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியது இல்லை. யார் என்ன சொன்னாலும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அமைதியாக இருங்கள் எனச் சொன்ன வார்த்தையை இப்போது வரை காப்பாற்றுகிறீர்கள்.

‘சீன்’ கொலை, மர்மம், கிறுக்குத்தனங்களுடன் கூடிய நகைச்சுவைப் படம். திறந்த மனதுடன் படத்தைப் பாருங்கள். இது அழகான தீபாவளியாக இருக்கும். இந்த வருடம் முக்கியமான வருடம். ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ வெளியாகி இருக்கிறது. இப்போது ‘சீன்’ வெளியாகப் போகிறது. இந்தப் படத்துடன் இந்த வருடம் அழகாக நிறைவடையும் என நம்புகிறேன்.

தீபாவளிக்கு ‘ராமாயணா’, மூக்குத்தி அம்மன் என நிறைய படங்கள் வருகின்றன. நம்முடைய ‘சீன்’ படமும் வருகிறது. எல்லாப் படங்களையும் சேர்ந்து கொண்டாட ஒத்துழைப்பு வழங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்த இடத்தில் தனுஷுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் ஒரு ட்வீட்டில், தீபாவளி வெளியீடாக ‘சீன்’ வர இருப்பதால், தனது ‘ஓம்’ பட வெளியீட்டை தள்ளிப் போடுவதாக தெரிவித்திருந்தார். இந்த மேடையில் அவருக்கும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சூர்யா பேசினார்.

ழகரம் ஸ்டூடியோஸுடன், ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவும், அஜ்மல் சாபு படத் தொகுப்பும் செய்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 6 அன்று வெளியாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply