தவறான விளம்பரம் வெளியிட்ட பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Priya
13 Views
2 Min Read

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் தவறான ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டதாகக் கூறி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்தைகளில் பிரிட்டானியாவின் ‘100% முழு கோதுமை ரொட்டி’ என்ற விளம்பரத்துடன் ஸ்லைஸ் பிரட் விற்பனையாகிறது. இந்த விளம்பரம் தவறானது எனப் பொதுமக்கள் இடையே புகார்கள் கிளம்பின.

ஏனெனில், இந்த அந்த ஸ்லைஸ் பிரட்டில் கோதுமையின் அளவு 62 சதவீதம் மட்டுமே உள்ளதாகத் தெரிந்துள்ளது. இதை கண்டறிந்த மத்திய அரசின் சிசிபிஏ, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இத்துடன், சிசிபிஏ தனது உத்தரவில், அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களிலும் பிரிட்டானியாவின் பிரட் மீதான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 15 நாட்களுக்குள் இது குறித்த இணக்க அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை சிசிபிஏ தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தது.

சிசிபிஏ அக்.22 அன்று வெளியிட்ட உத்தரவில், ‘இதன் மீதான ஆய்வில் பிரிட்டானியாவின் ஸ்லைஸ் பிரெட்டில் கோதுமையின் அளவு 62 சதவீதம் மட்டுமே உள்ளது. இத்துடன் அரிசி தவிடு உள்ளிட்ட பிற பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ’100% முழு கோதுமை’ என்ற கூற்று தவறானது. ஏனெனில், இது அந்த ரொட்டி முழுமையாக கோதுமையால் மட்டுமே தயாரிக்கப்பட்டது என்றும், வேறு எந்தப் பொருட்களும் அதில் இல்லை என்றும் தவறான பிம்பத்தை உருவாக்குகிறது.

தனது பிரட்டில் 62 சதவீத முழு கோதுமை மாவு மட்டுமே உள்ளது என்பதை அந்நிறுவனமே ஒப்புக்கொண்டது. எனவே, இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டதன் மூலம் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டானியா நிறுவனம் தனது விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பல விளம்பரங்களில் ’100%’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய கூற்றைப் பயன்படுத்தியது தற்செயலான ஒன்றல்ல. தனது தயாரிப்பில் வேறு எந்தப் பொருட்களும் கலப்படம் செய்யப்படவில்லை என்ற தெளிவான எண்ணத்தை இது நுகர்வோரின் மனதில் உருவாக்குகிறது.

இது, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விளம்பரம் மற்றும் கூற்றுகள்) ஒழுங்குமுறைகள், 2018-இன் படி, ‘முழு கோதுமை’ (Whole Wheat) என்ற சொல்லுக்கு முன்னால் ‘100 சதவீதம்’ என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

இது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் கீழ் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் செயலாகக் கருதப்படுகிறது. தங்கள் கூற்று தயாரிப்பின் தரத்தை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே என்ற நிறுவனத்தின் வாதத்தை சிசிபிஏ நிராகரிக்கிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply