“இந்திய சினிமாவில் இப்போது தேசப்பக்தி மற்றும் பக்திப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; இதனால் பிற வகைப் படங்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன” என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார், இயக்குநர் அனுராக் காஷ்யப்! உண்மைதான். இந்திய சினிமாவின் டிரெண்ட் இப்போது மாறியிருக்கிறது.
தனது வாழ்நாளில் தனிமையை விரும்பிய ஆன்மிகவாதியான நீம் கரோலி பாபா பற்றி சமீபத்தில் வெளியான இந்திப்படமான ‘ஹனுமன் அன்ஸ்’, ஏராளமானோரை திரையரங்குக்கு இழுத்து வந்திருக்கிறது. இயக்குநர் விஷால் சதுர்வேதி ரூ.1.7 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய இப்படம், ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பிரம்மாண்ட விளம்பரங்கள் ஏதுமின்றி, வெறும் வாய்மொழியாகவே மக்களை ஈர்த்து வசூல் சாதனை படைத்த படம் இது.
இப்படத்தின் வெற்றி உத்தராகண்டில் உள்ள நீம் கரோலி பாபாவின் ஆசிரமமான கைஞ்சி தாமுக்கு ஏராளமான பக்தர்களை வரவழைத்துள்ளது. விடுமுறை நாட்களில் இந்த ஆசிரமம் பக்தர்களின் கூட்டத்தால் திக்கு முக்காடுகிறது. இந்திய சினிமா தற்போது எங்கு செல்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி இது என்கிறார்கள் திரை ஆர்வலர்கள். அடுத்த சில வருடங்களுக்கு பாக்ஸ் ஆபீஸில் ‘கடவுள்’தான் ஆட்சி செய்யப் போவதாகவும் சொல்கிறார்கள். அதை நோக்கித்தான் இந்திய சினிமா செல்கிறது என்பதை அடுத்தடுத்து வர இருக்கும் படங்கள் மூலம் உணர முடிகிறது!
ராமாயணா: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் – பகுதி 1: ‘ஹனுமன் அன்ஸ்’ படத்தை அடுத்து நவ.5-ல் வெளியாகிறது புராண படமான ‘ராமாயணா’. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், ஹனுமானாக சன்னி தியோல் நடித்துள்ளனர். 2 பாகமாக உருவாகியுள்ளது இப்படம். பக்தி மற்றும் புராண கதைகளின் டிரெண்ட் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை இதன் வெற்றிதான் தீர்மானிக்கப் போகிறது என்கிறது சினிமா வர்த்தக நிபுணர்கள்.
அடுத்து பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின், ‘மகாகாளி’ உருவாகி வருகிறது. புராணக் கதையை மையப்படுத்தி உருவாகும் இதில் அக் ஷய் கன்னா சுக்ராச்சாரியராகவும், ஸ்ரேயா ரெட்டி மகாகாளியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூமி ஷெட்டி உள்பட பலர் நடிக்கின்றனர்.
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையுடன் உருவான ‘மகாவதார் நரசிம்மா’ என்ற அனிமேஷன் திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிரட்டியது. ஹோம்பாளே பிலிம்ஸ் வெளியிட்ட இப்படம், ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி, இந்தியாவில் அனிமேஷன் படம் ஒன்றின் அதிகப்பட்ச வசூலை தந்தது. இதை இயக்கிய அஸ்வின் குமார், அடுத்து ‘மகாவதார் பரசுராம்’ என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகிறார். விஷ்ணுவின் அடுத்தடுத்த அவதாரங்களையும் உருவாக்க உள்ளனர்.
ஜெய் ஹனுமான்: ‘காந்தாரா’ மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்ட ரிஷப் ஷெட்டி, ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் நடித்து வருகிறார். ஹனுமானின் பெருமையைச் சொல்லும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. இதை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பூஜையுடன் இப்படம் தொடங்கப்பட்டது. இதில் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபல இந்தி நடிகர் விக்கி கவுஷல் ‘மகாவதார்’ என்ற புராணப் படத்தில் நடிக்கிறார். ஜனவரியில் தொடங்கும் இப்படத்தை அமர் கவுசிக் இயக்க இருக்கிறார். இதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார், விக்கி கவுஷல்.
ராஜமவுலியின் ‘வாரணாசி’- ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரணாசி’ புராணக்கதையுடன் கலந்த படமாக உருவாகிறது. இதில் ராமாயணக் கதையின் ஒரு பகுதி இடம்பெற இருக்கிறது. மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
கர்ணனின் கதையை சொல்லும் படமாக உருவாகும் ‘கர்ணா’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துவருகிறார். பீஷ்மர், துளசி தாசரின் வாழ்வைச் சொல்லும் ‘ராம் போலா’, ஷீர்டி சாய்பாபாவின் பெருமையைப் பேசும் படம் என இன்னும் சில புராண, பக்தி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
பாலிவுட், புராணக் கதைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்க, தமிழில், கடவுள்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு வைக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அடுத்து, நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’, அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’, தனுஷ் நடிப்பில் ‘தமிழ் முருகன்’, மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘மாகாளி’ என பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
புராண, பக்தி படங்களை உருவாக்குவது இந்திய சினிமாவில் புதிதில்லைதான். 1931-க்கு முந்தைய மவுன படங்களின் காலத்தில் தயாரிக்கப்பட்ட ஏராளமான படங்களில், சுமார் ஆயிரம் படங்கள் நமது கடவுள்களின் கதைகளையே பேசின. பின்னர் சமூகக் கதைக்களத்தில் பயணித்த இந்திய சினிமா, ‘ஜென்-ஸி’ தலைமுறை என்று கூறப்படும் இன்றைய காலகட்டத்தில் மீண்டும் புராண படங்களுக்குத் திரும்பும் டிரெண்ட்டை ஆச்சரியமாகப் பார்க்கிறது திரையுலகம்.
இதுபற்றி, தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, “இதை டிரெண்ட் என்று சொல்ல முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்தே இதுபோன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பிட்ட ஜானர் படங்கள் உருவாகும்போது, அடுத்த என்ன மாதிரியான கதைகளைத் தேர்வு செய்யலாம் என்ற எண்ணம் படைப்பாளர்களுக்குப் பொதுவாகவே வரும்.
அப்போது இதுபோல புராண, பக்திக் கதைகளைத் தயாரிப்பது வழக்கமானதுதான். நமது புராணங்களில் ஏராளமானக் கதைகள் உள்ளன. மகாபாரதத்தில் இருந்து எனக்குத் தெரிந்து 10 திரைப்படங்கள் இப்போது உருவாகி வருவதாகக் கேள்விப்பட்டேன். இது நல்ல போக்குதான்” என்றார்.

