ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நவ.1-ல் டெல்லியில் பேரணி: நாட்டு மக்களுக்கு கார்கே அழைப்பு

Priya
810 Views
2 Min Read

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்ஐஆர் முறை நிறுத்தப்பட வேண்டும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் நவ.1-ம் தேதி நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள எக்ஸ் பதிவில், “வாக்கு திருட்டு தொடர்பாக எண்ணற்ற தகவல்கள் வெளிப்பட்டுள்ள போதிலும், ஞானேஷ் குமாரை பாதுகாக்க மோடி அரசு அனைத்து வழிகளிலும் முயற்சிகளை செய்து வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியபோது, அவை வணிக ரகசியம் எனக் கூறி அவற்றை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் படிவம் 6 தொடர்பான 16.18 லட்சம் விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. பிலிபித் தொகுதியின் பதிவுகளில் 10,470 வாக்காளர்கள் தொடர்பான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் படிவம் 6, 7, 8 ஆகியவற்றின் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து செயல்படுவதை எதிர்த்து இண்டியா கூட்டணி முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகள் இவைதான்.

1. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவரை பாதுகாக்கும் வகையில் 2023-ல் இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

2. எஸ்ஐஆர் முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோதமாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.

3. அனைத்து தேர்தல்களும் காகித வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்பட வேண்டும்.

இது வெறும் வாக்குகளைக் காப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. இது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கான மக்கள் போராட்டம். நாட்டின் விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் விடுக்கின்ற வேண்டுகோள் இது.

நவ.1-ம் தேதி டெல்லிக்கு வாருங்கள். ராம்லீலா மைதனத்தில் நடைபெற உள்ள வாக்குகளைக் காப்போம் – தேசத்தைக் காப்போம் என்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply