“விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் ‘லியோ தாஸ்’ ஆக வலம் வருகின்றனரோ?” – பழனிசாமி

Priya
756 Views
1 Min Read

‘தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை ‘லியோ தாஸ்’ ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கும், சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.

சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும், கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை ‘லியோ தாஸ்’ ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

கொள்கை, கூட்டணி என எல்லாவற்றிலும் ‘சமூக நீதி’ என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் சாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?

இது ஒரு பேட்டர்ன் ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா?

சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply