அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் 97-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (22-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் நவம்பர் 1 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. சர்வதேச அணியாக மலேசியா 2-வது முறையாக பங்கேற்கிறது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசு வழங்கப்படும். மேலும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகள் தலா ரூ.50 ஆயிரம் பெறும்.
இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகள் 2 பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்திய ரயில்வே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய ராணுவம், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹாக்கி கர்நாடகா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் இந்திய கடற்படை, மலேசியா, சாய், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு ஆகிய அணிகள் உள்ளன. போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 31-ம் தேதி நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி நவம்பர் 1-ல் நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு – சாய் அணிகள் மோதுகின்றன. மாலை 6 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

