“மருத்துவப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளை கூட உறுதி செய்யாதது மக்கள் நல அரசா?” – வேல்முருகன்

Priya
583 Views
2 Min Read

‘மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கே பணிப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படாத நிலையில், “மக்கள் நல அரசு” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வது ஏன்?’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களே, தங்களுடைய பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்வது வேதனைக்குரியது.

அக்டோபர் 5 அன்று 500-க்கும் மேற்பட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 12 அன்று 2,500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் காவல்துறை முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கோரிக்கைகளைப் பரிசீலிக்க அரசுக்கு கால அவகாசம் தேவை என்றால், தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பணியாளர்களைத் தடுத்து நிறுத்துவது ஏன்? போராட்டத்தைத் தடுப்பது நிர்வாகத்தின் வெற்றியா? அல்லது போராட்டத்திற்கான காரணத்தைத் தீர்ப்பதுதான் ஆட்சியின் கடமையா?

மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கே பணிப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படாத நிலையில், “மக்கள் நல அரசு” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வது ஏன்?

ஆட்சி மாறும்போது அரசின் அணுகுமுறையும் மாற வேண்டும். போராட்டம் நடத்தும் மக்களைத் தடுப்பது மட்டுமே நிர்வாகத்தின் அணுகுமுறையாக இருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை நேர்மையாகக் கேட்டு, உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காண்பதே பொறுப்பான ஆட்சியின் அடையாளமாகும்.

தமிழ்நாடு அரசு, மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply