வெங்காயம் கிலோ ரூ.35-க்கு ரேஷன் கடைகளில் விற்பனை: குறைபாடு இருந்தால் புகாரளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

Priya
611 Views
2 Min Read

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெங்காயத்தின் விலைஉயர்ந்து வருவதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், தமிழக அரசே வெங்காயத்தைக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.

இதற்காக, முதல்கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) மூலம் 910 மெட்ரிக் டன் வெங்காயமும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனம் (NCCF) மூலம் 65 மெட்ரிக் டன் வெங்காயமும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, இரு நிறுவனங்களிடமிருந்து 1,874 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டது.

இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பொதுமக்களின் தேவைக்காக மூன்றாம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

இவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறையின் 8,914 நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகளில் கடந்த அக்.10-ம் தேதி விற்பனை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, பிற மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் நேற்று முதல் விற்பனை தொடங்கியது.

மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வெங்காயத்தைப் பெற்றுப் பயனடையலாம்.

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பாகவோ அல்லது ஏதேனும் குறைகள் இருந்தாலோ பொதுமக்கள் 96005 61969 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply