சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு விதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ‘இ-சலான்’ அபராதங்களை வசூலிக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 20 நாட்களில் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு ‘இ-சலான்’ எனப்படும் மின்னணு அபராதச் சீட்டு வழங்கப்படுகிறது. சென்னையிலும் சிக்னலை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாகச் செல்வது, தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்துவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘இ-சலான்’ மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால், அபராதம் விதிக்கப்பட்ட பல வாகன ஓட்டிகள் அதை உடனடியாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சிலர் தங்களது வாகனத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்யும்போது மட்டுமே நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துகின்றனர். கடந்த ஓராண்டில் ரூ.120 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில், ரூ.35 கோடி மட்டுமே வசூலானது. இதனால் ஆயிரக்கணக்கான ‘இ-சலான்கள்’ நிலுவையில் இருந்ததுடன், பல கோடி ரூபாய் அபராதத் தொகையும் வசூலிக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து, நிலுவையில் உள்ள அபராதத் தொகையை வசூலிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி கடந்த மாதம் 16-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ‘இ-சலான்’ விவரங்களையும், நிலுவையில் உள்ள அபராதத் தொகையையும் எளிதாக தெரிந்துகொள்ள, சென்னையில் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அயனாவரம், ராயப்பேட்டை, மதுரவாயல், யானைகவுனி, புதுவண்ணாரப்பேட்டை, செம்பியம், மாம்பலம், அடையாறு, என மொத்தம் 15 இடங்களில் சிறப்பு அழைப்பு மையங்கள் (கால் சென்டர்கள்) அமைக்கப்பட்டன.
இந்த மையங்கள் கடந்த செப்.21 முதல் 30-ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன. அங்கு பணியில் இருந்த போலீஸார், நிலுவை ‘இ-சலான்’கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். நிலுவை அபராதம் தொடர்பான குறுஞ்செய்திகளும் வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்பட்டன. தொலைபேசி வாயிலாகவும், நேரில் அழைப்பு மையங்களுக்கு வந்து விசாரித்த மக்களுக்கும் அவர்களது நிலுவை ‘இ-சலான்’கள் மற்றும் செலுத்த வேண்டிய அபராதத் தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
போக்குவரத்து போலீஸாரின் இந்த தொடர் நடவடிக்கைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கடந்த செப்.16-ம் தேதி முதல் இதுவரை வாகன ஓட்டிகள் நிலுவையில் இருந்த அபராதத் தொகையை செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் இதுவரை ரூ.1 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

