வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை சென்னையில் ரூ.66.50 என உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் ஒன்று ரூ.2,983-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை மாதந்தோறும் 1-ம் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. எனினும், மதிப்புக் கூட்டு வரி போன்ற உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாநிலத்துக்குகு மாநிலம் அதன் விலை சற்று மாறுபடும்.
இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று (அக்.1) உயர்த்தி உள்ளன. இருப்பினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டுப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. சென்னையில் வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் ரூ.957.50-க்கு விற்பனை ஆகிறது.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 என்று உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.2,983 என தற்போது விற்பனை ஆகிறது. கடந்த ஜூலை மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.177, ஆகஸ்ட் மாதம் ரூ.200 என்று குறைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.10.50 என வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

