பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் தேர்தலில் தோல்வியடையும் போதெல்லாம் தேர்தல் ஆணையம், நீதித் துறை, ராணுவம் மீது குற்றம் சுமத்துகின்றன.
அந்த வகையில், தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புகின்றன. தேர்தல் ஆணையர்கள் மூவரும் இணைந்து, ஒருமித்த கருத்துடனேயே முடிவுகளை எடுக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, நாட்டின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைத்த 100 நாட்களிலேயே சட்டம் – ஒழுங்கு தொடர்பான தகவல்களை, ஆர்டிஐ வரம்பில் இருந்து நீக்குவதற்கு தவெக அரசு ரகசியமாக முயற்சி மேற்கொண்டது சர்வாதிகாரப் போக்கு. கடும் எதிர்ப்பு வந்ததும் அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்குப்பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆசிரியர்கள், ஊழியர்களாலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இது அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.
தங்க மோதிரம் வழங்குவதை விட, பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம். ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வழக்கை உடனே சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

