தாராபுரத்தில் வாக்காளர்களைக் கவர முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து தாராபுரத்தில் முகாமிட உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று தனது பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா தவெகவில் இணைந்து வேட்பாளராக களம் காண்கிறார்.
திமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சுகன்யா, அதிமுக தரப்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் வாக்காளர்களை சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் தலைவர்களும் தாராபுரத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர்.
இதன்படி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் எதிரக்கட்சித் தலைவருமான உதயநிதி இன்று (செப்.26) தாராபுரம் வருகை தருகிறார். அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட பொதுச் செயலாளர் பழனிசாமி 28, 29 ஆகிய 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பரப்புரை செய்ய, முதல்வர் விஜய் செப்.30-ம் தேதி வருகை தந்து, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அக். 4-ல் ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார்.ஏற்கெனவே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
முன்னணித் தலைவர்களின் வருகையால் தாராபுரம் தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

