இளம் தலைமுறையின் சக்தியால் வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால பொது சேவையை நினைவுகூரும் வகையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் `சேவை உறுதிமொழி இயக்கம்’ நடத்தப்படுகிறது. இதன்படி ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத்தின் வட்நகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாராணசிக்கு மோட்டார் சைக்கிளில் சிறப்பு யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். அவர்கள் நேற்று மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரை சென்றடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் காணொலி வாயிலாக பேசினார்.
அவர் கூறியதாவது: வட்நகர் – வாராணசி யாத்திரை மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பாஜகவின் சார்பில் பல்வேறு யாத்திரை, பேரணிகளில் நான் பங்கேற்று இருக்கிறேன். பயண அனுபவங்கள் நமது வாழ்க்கையை செதுக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எந்தவொரு சூழலிலும் அரசியலைவிட நாட்டின் நலனுக்கே முதலிடம் அளிக்க வேண்டும். பல்வேறு தேர்தல்கள் வரும், ஆட்சிகள் மாறக்கூடும். ஆனால் மக்கள் சேவையை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
இளம் தலைமுறையின் எழுச்சிமிகு சக்தியால் வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் என்று உறுதியாக நம்புகிறேன். நமது நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். “மக்களே கடவுள்” என்ற கொள்கையில் நாம் உறுதியாக இருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்வதற்கு முதலிடம் அளிக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டே ஏழை குடும்பங்களுக்காக ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் ஏழைகள், பெண்கள், நோயாளிகள், பழங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

