நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ( மூ) ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய தவெக அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற தவெகவின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே புதிய தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) ஆதரவளிக்கிறது என்பதை தமாகா (மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

