மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்ய 13 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் பலர், கடுமையான மாதவிடாய் வலியை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
அவர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில், ‘பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க 13 பெண் உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதங்கள் அவகாசம் தேவை’ எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த மனுதாரருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம். இவ்வழக்கு 2027 ஜன.21-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்று மாநில அரசு அமைத்துள்ள குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

