வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

Priya
631 Views
1 Min Read

வார விடுமுறையை முன்னிட்டு 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் பல்வேறு நகரங்களுக்கும் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 760 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 520 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 115 பேருந்துகளும், நாளை 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஒசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 70 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் வாரவிடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல இன்று 7,812 பயணிகளும் நாளை 4,001 பயணிகளும் ஞாயிறுக்கிழமை 8,946 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply