மறைந்த கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படயாக கொண்ட படத்தில், அவரது கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதி தொடங்க இருக்கிறது. இது குறித்து கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தமது எக்ஸ் தளத்தில் வெளிட்டுள்ள பதிவில், ‘மகத்தானதொரு மரபு மறக்க முடியாத கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.
கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 110-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘எம்எஸ் – எ லெகஸி ஆன் ஸ்க்ரீன்’ தொடங்க இருக்கிறது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கவுதம் தின்னுரி படத்தை இயக்குகிறர். அனிருத் இசையமைக்கிறார்’ என்று தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் முதலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர், இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் பிசியாக இருப்பதால், அவரால் இந்தப் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதில் ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், தற்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. இந்தப் படத்தை அல்லு அரவிந்த், பன்னிவாசு, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

