ஓபிசி பிரிவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி செப்.17 முதல் பிரச்சார இயக்கம்: தமிழக காங்.

Priya
587 Views
2 Min Read

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் 17-ம் தேதி முதல் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிட மோடி அரசு தொடர்ந்து தயங்குவது, ஆதிக்கச் சலுகைகளை பொதுவெளியில் மறைக்கும் அவர்களின் வர்க்க மற்றும் சாதிய இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது.

பாங்க் ஆப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் ரூ.35,716 கோடி பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. 2015-லேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், இந்த வங்கிகள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட மறுக்கின்றன.

இதேபோல், தொகுதி மறுவரையறை காரணங்களுக்காகக் கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்ட மோடி அரசு, ஒபிசி பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகள் குறித்த பட்டியல் இல்லை எனப் பொய் சொல்லி, சாதிவாரி கணக்கெடுப்பை முடக்க ’திறந்தவெளிக் கேள்வி’ (Open-ended question) என்ற சதியை அரங்கேற்றியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதும், உண்மையான ஒபிசி எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதும் ஆர்எஸ்எஸ்-ன் திட்டமிட்ட சதி. ஆர்எஸ்எஸ்-ன் உள்நோக்கத்தை நிறைவேற்ற, தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி வெறும் முகமூடியாக இருந்து, அமித் ஷாவுடன் சேர்ந்து இந்த வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்.

2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான். அது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான விவகாரம் என்பது அனைவரும் அறிந்ததே. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும் போது, ஓபிசி சாதி விவரங்களை மட்டும் முன்பே வரையறுக்கப்பட்ட பட்டியல் இன்றி ‘open-ended’ முறையில் சேகரிப்பது ஏன்?

மத்திய அரசின் பட்டியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட ஓபிசி சாதிகள் இருக்கும்போது, துல்லியமான பட்டியலைத் தராமல் பொதுவான கேள்வியாக வைப்பது மோடி அரசின் திட்டமிட்ட நாடகம்.

34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் ஒரு நடைமுறையில், முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் எதுவும் இல்லாமல் தவறுகளின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது வடிகட்டிய பகல்கனவு.

தெளிவான பட்டியலைத் தவிர்த்துவிட்டு ஒரு குளறுபடியான முறையைக் கையாள்வது மொத்தக் கணக்கெடுப்பையும் படுதோல்வியிலேயே முடிக்கும்.

உண்மையான ஒபிசி எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக்காட்டி, எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டையே அடியோடு சிதைத்துவிடும்.

பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரமற்றவர்களாகவே முடக்கி வைக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தம். ஆர்எஸ்எஸ்-ன் சமூக நீதி எதிர்ப்பை செயல்படுத்தும் முகமூடிகளாகத்தான் மோடியும், அமித் ஷாவும் இந்த துரோகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

இதை கண்டித்தும் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் இம்மாதம் 17-ம் தேதி சென்னையில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்” என தெரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply